என் நண்பர் பாஸ்கர் சக்தியின் கதை இது. விகடனில் "அழகர்சாமியின் குதிரை' தொடராக வெளிவந்த போதே அதன் நகைச்சுவையும், துறுதுறு நடையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அப்படியே அதே பெயரில் சினிமாவுக்கு எடுத்து வந்திருக்கிறேன். நிறைய சிரத்தை எடுத்து உழைத்து முடித்திருக்கிறோம். இளையராஜாவின் பின்னணி இசையில் படத்தைப் பார்க்கும் போது படம் இன்னும் அழகு. நம் சினிமாவின் புது எல்லையை இது தொடும் என்பதில் எனக்கு கடல் அளவு நம்பிக்கை இருக்கிறது. விரைவாகவே உங்கள் பார்வைக்கு வைக்க பணிகள் நடந்து வருகிறது' பரபரக்கும் வேலைகளுக்கு நடுவே பேசி முடிக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
"வெண்ணிலா கபடி குழு' கிராமப் பகுதி சார்ந்த கதை. "நான் மகான் அல்ல' முற்றிலும் வேறுபட்டது. இப்போது பாஸ்கர் சக்தியின் நாவல். வெவ்வேறு களங்களில் பணியாற்றும் தைரியம் எப்படி வந்தது?
கலைஞன் எல்லா இடங்களிலும் பயணிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன். "வெண்ணிலா கபடி குழு' போல நிறைய கதைகளை தொடர்ந்து செய்து விடலாம். ஆனால் அப்படி இயங்க எனக்கு இஷ்டம் இல்லை. "நான் மகான் அல்ல' வேறு களம். இரண்டுக்கும் மரியாதையான வெற்றியைத் தந்து உற்சாகம் தந்தார்கள். மிக்க நன்றி.
கிராமத்துக் கதையில் நீங்களே ஒரு நம்பிக்கையான இயக்குநர். திடீரென நகரத்து கதை ஒன்றை ஏன் செய்ய வேண்டும்? என அப்போது கேள்வி கேட்டார்கள். அப்போது சொன்னதுதான் இப்போதும்.
எல்லா இடங்களிலும் இருப்பவன் மட்டுமே சினிமாக்காரன். நான் இன்னும் வெவ்வேறு களங்களை எதிர்பார்க்கிறேன். அதற்கான வழிகளையும் வகுத்து என்னை வருத்தி உழைக்கிறேன். நான் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்ற ஒரே விஷயம்தான் இந்த தைரியத்துக்குக் காரணம்.
நாவல்கள் படமாகும் போது எதிர்மறையான சர்ச்சைகளும் எழும், இது எப்படி வந்திருக்கிறது?
இது சினிமாவின் அன்றாட நிகழ்வு அல்ல. எப்போதாவது நிகழும். அவ்வளவே. நண்பர் பாஸ்கர் சக்தியின் நகைச்சுவை உணர்வு கொண்ட இந்த நாவல், அந்த உணர்வில் இருந்து கையளவும் பிசகாமல் அப்படியே படமாகியிருக்கிறது. ஏதும் தவறு வந்துவிடக் கூடாது. விமர்சனம் எழுந்துவிடக் கூடாது என்ற கவனம் தொடக்கத்திலேயே எனக்கு இருந்தது. பாஸ்கர் சக்தியை அருகிலேயே வைத்துக் கொண்டு கவனமாக செய்து முடித்திருக்கிறேன். அவருக்கு மிகவும் சந்தோஷம். இதை அவரே என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். எதிர்மறையான விமர்சனங்களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பில்லை.
அழகான பெண், ஹீரோவாக நினைத்தே பார்க்க முடியாத ஒருவர், இருவருக்கும் குழந்தை மாதிரி ஒரு குதிரை என விதவிதமான ஸ்டில்களே எதிர்பார்ப்பை பெருக்குதே?
நிச்சயம். இந்தப் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். "வெண்ணிலா கபடி குழு' முடித்தவுடனே இந்தப் படத்தை இயக்கத்தான் ஆர்வம். ஆனால் சூழல் மாற்றிப் போட்டு விட்டது. இப்போது முடிந்ததில் சந்தோஷம். இந்தக் கதையில் உலவுகிற கேரக்டர்கள் எல்லாமும் நீங்களும், நானும் சந்தித்தவைதான். மண் குதிரையும், நிஜக் குதிரையும் காணாமல் போக, அதைத் தேடிப் பயணப்படுகிற இரண்டு ஜோடிகளின் கதைதான் இது. குதிரைகள் கிடைத்ததா? அவர்களின் எண்ணம் நிறைவேறியதா? என்பதுதான் கதை. மலையாளத்தில் இது மாதிரியான கதைகள் நிறைய வருவதுண்டு. தமிழுக்கு இது புதிது. உலக சினிமாவின் தரத்துக்கு இணையான ஒரு சினிமாவை தந்திருக்கிறோம். உங்கள் பார்வைக்கு வரும் போது இந்த வார்த்தை சத்தியமாகும்.
படத்தின் டைட்டில் இசையை இளையராஜாவே பெருமைப்படுத்தி பேசியிருக்கிறாரே?
கௌதம்மேனன் தயாரிப்பு, இளையராஜா இசை என்கிற போதே பலருக்கு ஆச்சரியம். இந்தப் படத்துக்கு இளையராஜா சார்தான் இசை என்றதும் வெரிகுட், சூப்பர், நன்றாக செய்யுங்கள் என்றார் கௌதம். டைட்டில் இசை உங்கள் எல்லோரையும் சாந்தமாக்கி அழ வைக்கும். அதைத்தான் இளையராஜா சார் ஒரு மேடையில் பேசினார். இளையராஜா சார் இசையில் இது புது உணர்வு. இப்படிப் பேசுவதில் எனக்குப் பெருமை.
அடுத்து விக்ரம் படம், எப்படி தயாரிப்பில் இருக்கிறீர்கள்?
அடுத்தப் படத்தில் விக்ரமுடன் இணைகிறேன். இது அவருக்காகவே உருவாக்கப்பட்ட திரைக்கதை. இருந்தாலும் இன்னும் மெருகேற்றி வருகிறோம். "நான் மகான் அல்ல' படத்தின் அதே யூனிட் இந்தப் படத்துக்கு பலம். கேரளத்தைச் சேர்ந்த தீக்ஷா ஷேத் இதில் விக்ரமுக்கு ஜோடி.
0 comments