தொடர்ந்து 6-வது வெற்றி பெங்களுரு அணிக்கு!!!

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 6வது வெற்றியை பெற்று சாதித்தது பெங்களூரு அணி.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 55வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இளம் கேப்டன்:
வெட்டோரிக்கு(முழங்கால் காயம்) பதிலாக பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி(22 வயது) ஏற்றார். இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் மிக இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். "டாஸ்' வென்ற விராத் கோஹ்லி "பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், டிராவிட் இணைந்து சூப்பர் துவக்கம் கொடுத்தனர். அரவிந்த் ஓவரில் வாட்சன் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஜாகிர் ஓவரில் டிராவிட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து லாங்கிவெல்ட், அரவிந்த் பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார் வாட்சன்.
அரவிந்த் அபாரம்:
இந்த நேரத்தில் போட்டியின் 10வது ஓவரை வீசிய அரவிந்த் திருப்புமுனை ஏற்படுத்தினார். 3வது பந்தில் வாட்சனை(34) வெளியேற்றினார். 5வது பந்தில் டிராவிட்(37) விக்கெட்டை கைப்பற்றி, இரட்டை "அடி' கொடுத்தார். இதற்கு பின் விராத் கோஹ்லி துல்லியமாக பந்துவீச, ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்தது. ரகானே(17) வீணாக ரன் அவுட்டானார். அரவிந்த் வேகத்தில் போத்தாவும்(19) வீழ்ந்தார். ராஸ் டெய்லர்(13) மீண்டும் சொதப்பினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்தது.
"சிக்சர்' கெய்ல்:
சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், தில்ஷன் இணைந்து அருமையான அடித்தளம் அமைத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர்கள் பவுண்டரி மழை பொழிந்தனர். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், தில்ஷன்(38), வார்ன் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி ஒத்துழைக்க, மீண்டும் ஒரு முறை வாணவேடிக்கை காட்டினார் கெய்ல். 13 ரன்கள் எடுத்த நிலையில் வார்ன் கைநழுவியதால் கண்டம் தப்பிய இவர், போத்தா, ராஸ் டெய்லர், மனேரிய பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். பங்கஜ் சிங் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த கோஹ்லி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி 17 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. கெய்ல் 70(6 பவுண்டரி, 4 சிக்சர்), கோஹ்லி 39(3 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். லீக் சுற்றில் கோல்கட்டா, டில்லி, புனே, பஞ்சாப், கொச்சி, ராஜஸ்தான் அணிகளை வரிசையாக வீழ்த்திய பெங்களூரு அணி, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது.
வார்ன் சோகம்:
இத்தொடருடன் ஓய்வு பெறும் ராஜஸ்தான் கேப்டன் வார்ன், தனது அணியின் சொந்த ஊரான ஜெய்ப்பூரில் பங்கேற்ற கடைசி ஐ.பி.எல்., போட்டியில் தோல்வியுடன் விடைபெற நேர்ந்தது.
ஆட்ட நாயகன் விருதை அரவிந்த் தட்டிச் சென்றார்.


Tags:

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

0 comments

Leave a Reply