லக்னோ: உ.பி. மாநில விவசாயிகளைத் தூண்டி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டி விட்டு வருகிறார் ராகுல் காந்தி. இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் உ.பி. முதல்வர் மாயாவதி.
இதுகுறித்து இன்று லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாயாவதி கூறுகையில், ராகுல் காந்தி திடீரென வருகிறார், விவசாயிகளுக்கு மத்தியி்ல் தோன்றுகிறார், போராட்டத்தில் ஈடுபடுகிறார். இது அத்தனையும் டிராமா.
முதலில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கட்டும். அந்த சட்டம்தான் விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. அதை விட்டு விட்டு உ.பியில் போராட்டம் நடத்தி பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
பட்டா-பரசுல் பகுதியில் சமூக விரோதிகளைத் தூண்டி பிரச்சினையை உருவாக்கியதே காங்கிரஸ்தான். மேலும் அப்பகுதியில், விவசாயிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் ராகுல்காந்தி. இதனால்தான் அவர் கைது செய்யப்பட்டார்.
நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைகள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் கூட உள்ளது. அதை முதலில் ராகுல் சரி செய்யட்டும். பிறகு இங்கு வரலாம் என்றார் அவர்.
0 comments