கடாபி வீடு மீது சரமாரியாக குண்டு மழை.

டிரிபோலி : லிபியத் தலைநகர் டிரிபோலியில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு, "நேட்டோ' விமானப் படைகள் கடுமையான குண்டுமழை பொழிந்தன. குறிப்பாக, லிபியத் தலைவர் கடாபியின் குடியிருப்பைச் சுற்றிய பகுதிகளில் இந்தக் குண்டு வீச்சுகள் நிகழ்ந்தன. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர். லிபியாவில் அதன் தலைவர் கடாபி பதவியை விட்டு விலகக் கோரி, மக்கள் மற்றும் ராணுவத்தின் ஒருபிரிவினர் இணைந்து, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

எதிர்த் தரப்பினருக்கு உதவுவதற்காக, ஐ.நா.,வின் தீர்மானத்தை நிறைவேற்ற மார்ச் 31 முதல் "நேட்டோ' அமைப்பு களத்தில் குதித்தது.இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று "நேட்டோ' விமானப் படைகள், கடாபியின் ராணுவ மையங்களின் மீது குண்டு மழை பொழிந்து தள்ளியது. அரைமணி நேரத்திற்குள் 12 ல் இருந்து 18 முறை ஒரே இடத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டன. மேலும், கடாபியின் குடியிருப்பான "பாப் அல் அஜீசியா' வைச் சுற்றிலும் உள்ள ராணுவ மையங்கள், கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்தும் நேற்று குண்டு வீச்சுக்கு இலக்காயின.

அதில், ராணுவத்தில் பணியாற்றி வந்த தன்னார்வத் தொண்டர்கள் தங்கியிருந்த ஒரு கட்டடம் மிக மோசமாக சேதம் அடைந்தது. இதுகுறித்து லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் தனது அறிக்கையில்,"அக்கட்டடத்தில் ராணுவ வீரர்கள் ஒருவரும் இல்லை. அப்பாவி மக்கள் மூன்று பேர் பலியாயினர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்' என்று கூறினார். பல மாதங்களாக கடாபி ராணுவப் பிடியில் இருந்த மிஸ்ரட்டா நகரை மீட்டதைத் தவிர, எதிர்த் தரப்பால் இப்போரில் குறிப்பிடத் தக்க அளவில் முன்னேற முடியவில்லை.தங்கள் தரப்புக்கு சர்வதேச ஆதரவைத் திரட்டுவதற்காக, பெங்காசியில் இயங்கி வரும் இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் நேற்று முன்தினம் துருக்கிக்கும் அதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கும் சென்று அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். பிரிட்டன், பிரான்ஸ், காம்பியா, இத்தாலி மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மட்டும் தற்போது லிபிய இடைக்கால அரசை அங்கீகரித்துள்ளன.

ஐரோப்பிய யூனியன் இருநாட்களுக்கு முன் பெங்காசியில் தன் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்ததன் மூலம், தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் ஜெப்ரி பெல்ட்மென் நேற்று அளித்த பேட்டியில்,"வாஷிங்டனில் லிபிய இடைக்கால அரசின் அலுவலகம் ஒன்றைத் திறக்க அழைப்பு விடுத்திருந்தோம். அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். லிபிய அரசின் சொத்துக்கள் மீதான அமெரிக்காவின் தடை விரைவில் நீங்கும். மனிதாபிமான உதவிகளுக்காக அவை பயன்படுத்தப்படும் என நம்புகிறோம்' என்று கூறினார்.  
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

1 comments

  1. kadaafi comes to end

Leave a Reply