பார்த்திபன் கனவும் மாவீரகளின் தியாகமும்!!!
வரலாற்றில் சோழப் பேரரசு ஒன்று இன்னும் தோன்றாமல் இருந்த காலம் ,களம் அது ....கி.பி. எட்டாம் நூற்றாண்டு... பல்லவர்கள் தமிழகத்தை முழுவதும் கைகொண்டு ஆட்சி செய்த காலம். சோழர்கள் பல்லவர்களின் சிற்றரசர்களாய் கப்பம் கட்டிக் கொண்டிருந்த காலம்.சோழ மன்னனாக பார்த்திபன் பல்லவன் நரசிம்ம வர்மன் கீழ் கப்பம் கட்டிகொண்டிருந்த காலம்.பெரும் பாரம்பரியத்தில் கரிகாலனின் அரியணையில் சிற்றரசனாக பார்த்திபன்.நெஞ்சு பொறுக்காமல் குமுறிகொண்டிருந்தான் பார்த்திபன்.மிக சக்தி வாய்ந்த பல்லவ பேரரசின் முன்னால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என சோழ மக்கள் முடங்கி கொண்டிருந்தனர்.பர்த்திபனுக்குளோ அடிமை விலங்கை உடைத்து சுதந்திர நாடாக தன் சோழ நாட்டை மாற்ற வேண்டும் என்ற லட்சியம் .மக்களுக்கு மன உறுதியை ஏற்படுத்த பெரு முயற்சி செய்தும் மக்கள் மனதில் விடுதலை தாகம் ,போராட வேண்டும் என்ற எண்ணம் ஆட்கொள்ளவில்லை.என்ன செய்வது என்று சும்மா இருக்கவில்லை பார்த்திபன் .அளப்பரிய தியாகத்தை செய்ய முடிவு செய்தான் .
தன்னுடன் கண்ணுக்கு கண்ணாக இருக்கும் சிறிய படை கொண்டு கடல் போன்ற பல்லவ படையுடன் மோத முடிவு செய்து போர் பிரகடனம் செய்தான்.சோழ மக்கள் எல்லோரும் அரசனுக்கு என்ன ஆயிற்று?பல்லவனோடு போரிட்டு வெல்வது கனவிலும் சாத்தியமில்லையே ! போரில் தோல்வியும் மரணமும் நிச்சயம் ஆயிற்றே ! என புழுங்கினார்.. ஆனால் பார்த்திபன் தான் திட்டமிட்டவாறே தன் சிறிய படையுடன் கடல் போன்ற பெரும் பல்லவ சேனையை எதிர்த்து , போரிட்டு பெரும் சேதத்தை எதிரிக்கு ஏற்படுத்தி ,காலனாக களமாடினான்.அவனின் ஆக்ரோசம் தாங்காமல் பல்லவ மன்னனே நேருக்கு நேர் போர் புரிய வேண்டிய கட்டாயமாயிற்று .மிக உக்கிரமான போர்.சோழ படை வீரர்கள் தாம் வீழ்வது உறுதி என்ற நிலையிலும் போர் களத்தில் எதிரிகளை மிக உக்கிரமாக தாக்கி பலியாகி கொண்டிருந்தனர்.ருத்ர தாண்டவம் ஆடினான் சோழன்.காற்றுப் புக முடியா வண்ணம் வாள் வீசினான். மறவனுக்கு போர் களத்தில் வெற்றியோ அல்லது விழுப்புண்ணால் வீர மரணமோ தவிர்க்க முடியாதது. இறுதியில் விழுப்புண் பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தான் பார்த்திபன் .
துறவி வேடத்தில் பார்த்திபனுக்கு எதிரே வந்தான் பல்லவன் நரசிம வர்மன். மிகுந்த ஆச்சரியத்துடன் சோழ மன்னனை வியந்தான்.வீரனுக்கு வீரன் செய்யும் அங்கீகாரம் அது.சிறிது நேரம் அமைதி காத்து விட்டு பின் உரையாடலானான் பல்லவன்.காலனை ஒத்த சோழ மன்னா !வெற்றி நிச்சயம் இல்லை , போரில் மரணம் உறுதி என்னும் சூழ்நிலையில் எதற்காக போர் பிரகடனம் செய்து போரிட்டாய் என பார்த்திபனை வினவினான். உன்னை போன்ற ஒரு வீரனை நான் இதுவரை போரில் எதிர்கொள்ளவில்லை. உனக்கு நான் ஏதேனும் செய்ய வேண்டும் .உன் போன்ற வீரனுக்கு மரியாதையை செய்யும் வரம் எனக்கு வேண்டும் என உரைத்தான் பல்லவன் நரசிம்மன் .
காயம்பட்ட நிலையிலும் புன்முறுவலுடன் பெரும் மகிழ்ச்சியுடன் பேச தொடங்கினான் பார்த்திபன்..
துறவியே ! நான் பிறந்த எங்கள் சோழ நாடு தனக்கென்று ஒரு பெரும் வரலாறு உடையது.காவிரியின் பாசத்தால் கழனி நிறைந்த நாடு.கடல் கடந்து போர் வென்ற எல்லாளன்,நரை முடித்து முறை செய்த பெருவீரன் கரிகால பெருவளத்தான் ,தமிழ் விளையாடும் நற்றமிழ் புலவர்கள், நாட்டுக்காக நஞ்சையும் நள பாகமாக விரும்பும் நனி சிறந்த மக்கள் என சீருடையுது. சமீப காலமாக பல்லவ ஆட்சியில் சிற்றரசாக மாறிய பின் மக்களிடம் இருந்த நாட்டுப பற்றும் வீரமும் பொறுப்பும் குறைந்து விட்டது.அவர்களுக்கு விடுதலை வேட்கையை உண்டாக்க பெரு முயற்சி செய்தும் மக்கள் கிளர்ந்து எழவில்லை. ஆகையால் போரில் ஈடுபட்டு என்னையும் என் உயிரினும் மேலான வீரர்களையும் களப் பலி கொடுத்து, என் மீது அளவில்லா அன்புடைய, குடி மக்களிடயே விடுதலை வேட்கையை வார்க்க முடிவு செய்தேன்.என் கண்மணிகளான வீரர்களும் மனம் விரும்பி இந்த வேள்வி தீயில் என்னோடு தோள் கொடுத்து இன்று மாவீரர்களாகி உள்ளனர்.இந்த செய்தி எம் மக்களை எட்டும் போது பெரு வெள்ளம் போன்று உணர்வு கொண்டு விடுதலையை வென்று எடுப்பர் என்றனன் .
ஐயா, தாங்கள் ஏதேனும் செய்வதாய் இருந்தால் என் மக்களிடையே உருவாகும் வேட்கையை உரிய வழியில் வார்த்து எடுத்து எம் சோழ நாடு விடுதலை அடைய உறு துணையாய் இருங்கள் என்று கூறி வீர மரணம் அடைந்தான் ....செய்தி கேட்டு கிளர்ந்தனர் சோழ மக்கள்.....பட்டத்து இளவரசனை பக்குவமாய் வார்த்து பெரு வீரனாக்கி அவன் தலைமையில் விடுதலை அடைந்தனர். பிற்காலத்தில் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டு கடாரம் வரை வென்ற சோழ பேரரசு அந்த பார்த்திபன் மற்றும் வீரர்களின் தியாகத்தால் உருவான அக்கினி குஞ்சு. அந்த தியாகத்துக்கு சோழ மக்கள் தந்த வெகுமதி..தம்மை களத்திலிட்டு தம்மின மானம் காத்த மாவீர்களின் தவம் அது ..
அன்புக்குரிய தமிழீழ மக்களே,
மணலாறு முதல் கிளிநொச்சி வழியாக முள்ளிவாய்க்கால் வரை ஆயும் ஏந்தி களமாடிய போராளிகளும்,ஆயும் ஏந்தாமல் களம் அகலாமல் மௌன புரட்சியே செய்து தம் இன்னுயிர் ஈந்த மக்களும், 1200 ஆண்டுகளுக்கு பின் அந்த பார்த்திபனும் அவனது மாவீரர்களும், செய்த தியாகத்தையே மறுபடியும் செய்து அதே செய்தியையே நமக்கு விட்டு சென்றுள்ளனர்.அவர்கள் நினைத்திருந்தால் களம் விலகி தம் உயிர் காப்பாற்றி கொண்டிருக்க முடியும். ஆனால் தங்களை பலியிட்டு நம்மை ஆட்கொண்டுள்ளனர் ....
நாம் என்ன செய்ய போகிறோம்? என்ன செய்ய வேண்டும் ?
ஒரு பார்த்திபன் கனவும் மாவீரகளின் தியாகமும் எப்படி பிற்காலத்தில் பெரும் சோழ பேரரசை நிறுவி வானளாவிய புகழ் அடைந்ததோ ! இந்தியா கண்டமே செய்திராத அளப்பரிய சாதனைகளை இந்துமா கடலில் செய்ததோ ! அதே போன்ற வரலாற்று மறுமலர்ச்சியை படைத்து சுதந்திர தமிழ் ஈழம் படைக்க உறுதி எடுப்போம்.!!! வெற்றி நிச்சயம்..
அமைதி போராட்டங்களின் மூலம் களங்களை புலங்களில் அமைப்போம் !!!! களங்களில் உடையாத "கலங்கலை" புலங்களில் புடம் போட்டு காட்டுவோம் !!!! மக்களை திரட்டி மா வினை செய்வோம் !!! கிஞ்சித்தும் நெஞ்சுருகார் இதயங்களை காட்சிகளால் கவர்ந்து கட்டியம் கூறுவோம் !!!
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்...
1 comments
Leave a Reply
12 July 2011 at 8:27 am
Good Continue...